தலைநகர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் 35 வயது வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு டெல்லியின் ரோஹிணி செக்டார் 10 பகுதியில் உள்ள ஒரு மால் அருகே, பிரசாந்த் விஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில் பிந்து (35) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மக் கும்பல் ஒன்று, திடீரெனத் தங்களிடம் இருந்த கூர்மையான ஆயுதங்களால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த பிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இக்கொடூரத் தாக்குதலைக் கண்டு அப்பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் அலறியடித்து ஓடினர். தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரசாந்த் விஹார் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை டெல்லி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
