தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக் என்பவரால் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து மௌனம் கலைந்துள்ளார். லிஸிக்கு 4 வயது இருக்கும் போதே இந்தத் துன்புறுத்தல் தொடங்கியுள்ளது. குடும்ப வறுமை காரணமாக தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில், தந்தை இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த ரகசியத்தைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த லிஸி, 2011-ஆம் ஆண்டு தனது வீட்டில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு தந்தையின் உண்மை முகத்தை அறிந்தார். திருடப்பட்ட மடிக்கணினியில் ஆயிரக்கணக்கான குழந்தை ஆபாசப் படங்கள் இருந்ததை, மடிக்கணினியைத் திருடிய திருடனே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் லிஸியின் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு, லிஸி தான் அனுபவித்த அனைத்து கொடுமைகளையும் தனது தாயிடம் மனம் திறந்து கூறினார். தனது தந்தை தன்னை மிரட்டிப் பணிய வைத்தது குறித்தும், மாலை நேரங்களில் அண்ணன் தூங்கிய பிறகு தன்னை வன்கொடுமை செய்தது குறித்தும் கண்ணீர் மல்க விவரித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இறுதியாக, 30 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லிஸியின் தந்தைக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு நீதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், அந்தப் பழைய கசப்பான நினைவுகளிலிருந்து தன்னால் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை என்று லிஸி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
