விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி பகுதியில், மது போதையில் இருந்த தந்தை தனது மகளையே அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத் தொழிலாளியான பாபு என்பவர், கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது, பிளஸ்-2 படித்து வந்த அவரது மகள் வைஷ்ணவியிடம் உணவு கேட்டுள்ளார். அப்போது சமையல் இன்னும் முடியவில்லை என்று சிறுமி சொன்னதால் ஆத்திரமடைந்த பாபு, பெற்ற மகள் என்றும் பாராமல் அவரது தலையைச் சுவரில் மோதச் செய்ததோடு, காலால் எட்டி மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தந்தையின் தாக்குதலால் நிலைகுலைந்து போன மாணவி, பலத்த காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த வன்முறை தொடர்பாகக் காவல்துறையினர் பாபுவைக் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், உயிருக்கு மேலாகப் போராடி வந்த வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். பசிக்குச் சோறு போடவில்லை என்ற காரணத்திற்காக, ஒரு தந்தை தனது மகளையே அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
