மகாராஷ்டிராவின் கெரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கா என்பவர், வரவிருக்கும் கிராம சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்குள்ள ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ விதியின்படி, மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தனது அரசியல் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மூன்றாவது மகள் பிராச்சியை (6) எப்படியாவது அகற்றத் துடித்த அவர், முதலில் தத்தெடுக்கக் கொடுக்கவும், பிறப்புச் சான்றிதழை மாற்றவும் முயன்றார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், இறுதியில் ஒரு கொடூரமான முடிவை எடுத்தார்.
கடந்த வாரம், மகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி தெலங்கானாவின் நிஜாமாபாத்திற்கு அழைத்துச் சென்ற பாண்டுரங்கா, அங்குள்ள போதன் கால்வாயில் சிறுமியைத் தூக்கி எறிந்துவிட்டு எதற்கும் கலங்காமல் ஊர் திரும்பினார். பின்னர் கால்வாயில் மிதந்த பிராச்சியின் சடலத்தை மீட்ட தெலங்கானா காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தந்தை செய்த இந்தக் கொடூரக் கொலை அம்பலமானது. ஒரு தந்தை தனது பதவி ஆசைக்காகத் தன் மகளையே பலிகொடுத்ததைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
