பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் ஆனந்த் அவென்யூ பகுதியில், இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 27 வயதான அமித் சபர்வால் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அப்போது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது ஸ்கூட்டரை நகர்த்துமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர் தரப்பைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அமித்தை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அமித்தை, அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர், ஆரம்பத்தில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்ததாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அபி ஷா, சன்னி ஷா மற்றும் ரித்திக் ஷா ஆகிய மூன்று சகோதரர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, எளிய பார்க்கிங் தகராறு கொலையில் முடிந்திருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அரசு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
