“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

By Muthu Mani on வைகாசி 1, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது குடும்பத்தினர் தாந்திரீக சடங்குகளைச் செய்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் பிரஜாபதி என்பவர், 2017-ஆம் ஆண்டு மருத்துவமனையில் உயிரிழந்த தனது தந்தையின் ஆன்மா இன்னும் அங்கேயே சுற்றித் திரிவதாக நம்பி, மேளதாளங்களுடன் மருத்துவமனை வளாகத்திற்கு வந்துள்ளார். கையில் மண் பானை, மாலைகள் மற்றும் ஊதுபத்திகளுடன் வந்த அவர்கள், மருத்துவமனையின் 4-வது நுழைவு வாயில் அருகே அமர்ந்து வினோத வழிபாடுகளைச் செய்தனர்.

இந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணம் இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தினேஷ் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தொடர் சிக்கல்களுக்குத் தீர்வு காண ஒரு பெண் தாந்திரீகரை அணுகியுள்ளார். அந்தத் தாந்திரீகர், “உன் தந்தையின் ஆன்மா இன்னும் மருத்துவமனையிலேயே அலைந்து கொண்டிருக்கிறது, அதை வீட்டிற்கு அழைத்து வந்து முறைப்படி பிரதிஷ்டை செய்தால்தான் குடும்ப கஷ்டங்கள் நீங்கும்” என்று கூறியுள்ளார். அதனை அப்படியே நம்பிய தினேஷ், மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து கோட்டாவிற்குத் தனது தந்தையின் ‘ஆன்மாவை’ அழைத்துச் செல்ல வந்துள்ளார்.

   

மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அறிவியலும் நவீன மருத்துவமும் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும், படித்தவர்கள் கூட இது போன்ற போலித் தாந்திரீகர்களின் பேச்சை நம்பி மூடநம்பிக்கையில் விழுவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், போலி நம்பிக்கைகளால் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும், விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.