சென்னை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நேரத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அங்கிருந்த துப்புரவுப் பணியாளர் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்து பிறந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டீபன் ராஜின் மனைவி மெர்சி (33) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நேற்று இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த நேரத்தில் அங்கு தகுதியான மருத்துவர்களோ, செவிலியர்களோ பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, அங்கு ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கும் ஆயாம்மாக்கள் இருவர் கையுறை அணிந்து கொண்டு மெர்சிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, வெறும் வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மெர்சிக்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்ட போது அது ஏற்கனவே உயிரிழந்து பிறந்தது தெரியவந்தது. தற்போது தாய் மெர்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே மெர்சிக்கு பிறந்த முதல் குழந்தையும் இவர்களின் அலட்சியத்தால் குறைப் பிரசவமாகப் பிறந்த நிலையில், தற்போதும் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாலேயே இரண்டாவது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ராஜ், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்ணகி நகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, நியாயம் கேட்டு வாசலில் அமர்ந்து தீவிர மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
இந்தத் தாலுகாவில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வரும் சூழலில், கடந்த மாதம் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்டுச் சென்ற சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணமூர்த்தி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, பொதுமக்களும் உறவினர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். “அன்றே நீங்கள் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஒரு குழந்தையின் உயிர் போயிருக்காது” என மக்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இங்கு மருத்துவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதாகவும், மற்ற நாட்களில் பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளிப்பதாகவும், குறிப்பாக மருத்துவமனையில் பணிபுரியும் ஆயாம்மாக்களே மருத்துவர்கள் போல் செயல்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பெயருக்கு மட்டுமே 24 மணி நேர மருத்துவமனையாகச் செயல்படும் இங்கு, உடனடியாகத் தகுதியான மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவிய நிலையில், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களைக் கலைந்து போகச் செய்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…
நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…
கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…
சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…