“கண் இமைக்கும் நேரத்தில் சுருண்ட கிராமங்கள்”…. நேபாளத்தில் திடீரென கொட்டிய கருப்பு வெள்ளம் உருவம்…. 4 பேர் பலி…. மக்களுக்கு அவசர எச்சரிக்கை…..!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள பூ கண்டகி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீரென ஏற்பட்ட கருப்பு நிற பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமுப்ரி ஊரக நகராட்சிப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ‘சும்கே கோலா’ ஓடை தடைபட்டு, பின்னர் இயற்கை அணை உடைந்து திடீரென நீர்வரத்து அதிகரித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றின் ஆக்ரோஷமான பாய்ச்சலால் ஜகத் மற்றும் சல்லேரி பஜார் பகுதிகளில் நதிக்கரையை ஒட்டியிருந்த பல வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுவரை இந்த பேரிடரில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பேரிடரின் தீவிரத்தை உணர்ந்த நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) உடனடியாக மொபைல் குறுஞ்செய்தி (SMS) மூலம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்தது. மேலும், அருவகாட் பகுதி காவல் நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கிகள் மூலமாக நதிக்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திரிசூலி தோபன் வரை உள்ள பொதுமக்கள் யாரும் நதியை நெருங்க வேண்டாம் என்றும், உடனடியாக மேடான மற்றும் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

   

தற்போதைய நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக நேபாள ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் வான்வழி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சல்லேரி மற்றும் ஜகத் பஜார் பகுதிகள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுவதால், அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தொடரும் அபாயச் சூழலைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.