உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கேரி மாவட்டம் நிக்காசன் பகுதியில் உள்ள மாஞ்சா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங் (54). இவர் தனது கால்நடைகளைத் தேடி ஆற்றைக் கடக்க முயன்ற போது, நீரில் மறைந்திருந்த முதலை திடீரென அவரைத் தாக்கி இழுத்துச் சென்றுள்ளது. அருகில் இருந்த அவரது மகன் இதைக் கண்டு அலறித் துடித்து உதவிக்குக் கிராம மக்களை அழைத்தார். மக்கள் ஓடி வருவதற்குள் முதலை அந்த விவசாயியை ஆழமான நீர் பகுதிக்கு இழுத்துச் சென்று மறைந்தது.
சம்பவ இடத்தில் பால வசதி இல்லாத காரணத்தினால் தான் மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது என்றும், அப்பகுதியில் ஆற்றுப் பாலம் கட்டித் தர வேண்டும் என்றும் கோரி கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் கரையில் அழுது புலம்பும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை நெகிழ வைத்துள்ளன. தற்போது வனத்துறை மற்றும் காவல் துறையினர் மீட்புக் குழுவினர் உதவியுடன் விவசாயியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
