திக் திக் திக்… கார் , நகையை தர்றியா?… இல்ல வெட்டட்டுமா?… மதுபோதையில் நண்பனை பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்த கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பணம், கார் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீ.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (34) என்பவர் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இரவு வன்னிவேடு பகுதியில் சாலையோரம் கோரப்புற்களுக்கு நடுவே பல வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வாலாஜாபேட்டை போலீசார் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிப் பகுதியில் வாகனச் சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த ரஃபீக் (35), அமீன் பாஷா (42) மற்றும் சென்னை பட்டாபிராத்தைச் சேர்ந்த அஜித் (25) ஆகியோர்தான் ஜீவாவைக் கொலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது.

   

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜீவாவுக்கும் ரஃபீக்கிற்கும் இடையே இருந்த தொழில் மற்றும் பணப் பரிமாற்றத் தகராறில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ரஃபீக் உள்ளிட்ட மூவரும் ஜீவாவை வன்னிவேடு பகுதிக்கு வரவழைத்துத் தங்களது கார் மற்றும் நகைகளைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைப் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி, ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.