சுயாதீன இசைக் கலைஞரான அசல் கோலார், சேலம் மரவனேரி பாரதி வித்யாலயா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கிப் பாராட்டைப் பெற்றுள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் உயரிய நோக்கில் இந்த நிதியுதவியை அவர் வழங்கியுள்ளார்.
இன்று நடைபெற்ற நன்கொடை வழங்கும் விழாவில் நேரில் கலந்துகொண்ட அசல் கோலார், பள்ளி மாணவ, மாணவிகளுடன் மிகவும் உற்சாகத்துடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் தனது புகழ்பெற்ற கானா மற்றும் ராப் பாடல்களைப் பாடி, அங்கிருந்த எல்லோரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.
மேலும், மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்துக்கொண்ட அவர், அவர்களுடன் சில மணி நேரங்களை இனிமையாகச் செலவிட்டார். முன்னணி இசைக் கலைஞரின் இந்த நற்செயலும் மாணவர்களுடனான நெகிழ்ச்சியான சந்திப்பும் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
