ஆட்சி மாற்றம் பெரிய அளவிலான நல்ல விடிவைக் கொண்டுவரும் என்ற மக்களின் அதீத நம்பிக்கையால் த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. நூறு நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ள இந்த புதிய அரசு, தனது முதலாவது நிதிநிலை அறிக்கையைச் சமீபத்தில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்துள்ளது. மாநில நிர்வாகத்தின் நிதி ஆதாரமானது, சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் பதிவு, நில விற்பனை, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரிப்பகிர்வு மற்றும் மானியங்கள் போன்ற வரி மற்றும் வரியல்லாத பல்வேறு வழிகளில் கிடைக்கிறது. இருப்பினும், அரசின் நிதித் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய இந்த வருமானம் போதுமானதாக இல்லாததால், பல்வேறு திட்டங்களுக்கும் செலவுகளுக்கும் கடன்பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு நிலவுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசின் ஒட்டுமொத்த வரவு 89,718 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் பழைய கடன்களுக்கான வட்டி மற்றும் ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக 1.23 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதால், வருவாய் பற்றாக்குறை 25,267 கோடி ரூபாயை எட்டியுள்ளது. வரவை விட செலவினங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக, அரசு கடன் பத்திரங்கள் வெளியீடு மற்றும் வங்கிகள் மூலமாகத் தொடர்ந்து நிதியைத் திரட்டி வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 12,044 கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது; ஒட்டுமொத்தமாக இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட கடன்தொகை 32,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டச் செலவுகள் மற்றும் கடன் அளவுகளை விடச் சற்று அதிகமாகும்.
