பிரிட்டனில் மருத்துவ உலகின் ஒரு மாபெரும் சாதனையாக, கருப்பை இல்லாமல் பிறந்த ஒரு பெண், கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். கிரேஸ் பெல் என்ற அந்தப் பெண் தனக்கு இருந்த அரிய குறைபாட்டினால் கருப்பை இன்றி பிறந்தார். இதனால் அவர் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்போர்டில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில் அவருக்கு சுமார் 10 மணிநேர சிக்கலான கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மேலும் ஒரு இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கருப்பை அவருக்கு பொருத்தப்பட்டது, இது பிரிட்டனில் இத்தகைய முறையில் நடந்த முதல் வெற்றிகரமான முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தில் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் அவர் கருவுற்றார். கடந்த டிசம்பர் மாதம் லண்டனின் குயின் சார்லோட்ஸ் மற்றும் சென்சி மருத்துவமனையில் 3.09 கிலோ எடையுடன் ‘ஹியூகோ பவல்’ என்ற அழகான ஆண் குழந்தையை அவர் ஈன்றெடுத்தார்.
இந்த மருத்துவ அதிசயம் இயற்கையாக கருத்தரிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்த பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மித் என்பவரை கௌரவிக்கும் வகையில், அந்த தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு இடைப்பெயராக ‘ரிச்சர்ட்’ என்று சூட்டியுள்ளனர்.
