“மிட்டாய் தர்றேன் வா…” 9 வயது சிறுமியைக் கடத்தி கத்தி முனையில் கொடூர முயற்சி: காமுகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி..!

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள சிறப்பு போக்சோ (POCSO) நீதிமன்றம், 9 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியான ராஜு ஹரிஜன் என்ற ராம்நிவாஸ் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவனுக்கு 11,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட்ஸ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் 2021 டிசம்பர் 30 அன்று மாலை நடந்துள்ளது. குற்றவாளி ராஜு ஹரிஜன், 9 வயது சிறுமியிடம் நயவஞ்சகமாகப் பேசி, மிட்டாய் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டியுள்ளான். பின்னர் கூர்மையான கத்தியைக் காட்டி, சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். எனினும், அந்தச் சிறுமி தைரியத்தை கைவிடாமல் அவனிடமிருந்து தப்பித்து ஓடிவந்து, தன் பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்ததைக் கூறியதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவனைக் கைது செய்தனர்.

   

இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஓம்கார் சுக்லா, இருதரப்பு வாதங்களையும், சாட்சிகளையும், காவல்துறையினர் சமர்ப்பித்த ஆதாரங்களையும் தீவிரமாகப் பரிசீலித்தார். குற்றவாளி ஒரு சிறுமியின் மீதும் அவளது கண்ணியத்தின் மீதும் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளார் என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு, அவரிடமிருந்து வசூலிக்கப்படும் 11,000 ரூபாய் அபராதத் தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.