இரவு 11 மணியளவில், 70 வயதான சௌத்ரி என்பவர் கையில் பெட்டியுடன், வியர்வையில் நனைந்த முகத்துடனும் மிகுந்த ஏமாற்றத்துடனும் குடியிருப்பு நுழைவாயிலில் நிற்பதைக் கண்டு, பாட்டீதார் என்பவர் அவரை வீட்டிற்குள் அழைத்துள்ளார். நடுங்கும் குரலில் பேசிய பெரியவர், காசியாபாத்தில் இருக்கும் தனது தம்பிக்கு மருத்துவ அவசர நிலை என்றும், அவரைப் பார்க்கச் செல்ல கடந்த 3 மணி நேரமாகச் சாலையில் நின்று வாகனங்களைக் கூப்பிட்டும் யாரும் நிறுத்தவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பாட்டீதார் “ஆப் மூலம் கேப் புக் செய்யலாம்” எனக் கூறியபோது, பெரியவர் தனது பழைய மாடல் போனை எடுத்து வைத்து, “எனக்கு இந்த ஆப் பயன்படுத்தத் தெரியாதுப்பா… எல்லாரும் ஆப் மூலம் புக் செய்ததாகச் சொல்லிச் செல்கிறார்கள்” எனக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய டிஜிட்டல் சூழலில், செயலிகளைப் பயன்படுத்தத் தெரியாத நமது வீட்டுப் பெரியவர்கள் சந்திக்கும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த எக்ஸ் பதிவு அமைந்து சமூக வலைதளங்களில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
