புதுக்கோட்டை மாவட்டம் குலவைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மதுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கண்களை திறக்காமல் இருந்த மது ஸ்ரீயை பெற்றோர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிறுமிக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியாததால் 24 மணி நேரம் கழித்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கட்டுவிரியன் பாம்பு சிறுமியை கடித்து இருப்பதாகவும், அந்த பாம்புகள் கடித்தால் இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டு ஒருவார தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுமி உயிர் பிழைத்தார்.
மகளை காப்பாற்றிய டாக்டர்களுக்கு சிறுமியின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார். பொதுவாக பாம்புகள் கடித்தால் 30 முதல் 40 நிமிடங்களுக்குள் மருத்துவ உதவி பெறுவது கட்டாயம். ஆனால் கட்டுவிரியன் பாம்பு கடித்து 24 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு சென்ற போதிலும், மருத்துவர்கள் சிறுமியை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
