வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் மூன்று சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற்ற இக்கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைநகர் டெல்லியில் 6 வயது சிறுமி ஒருவர், தனது மறைந்த சகோதரனின் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள், அந்தச் சிறுமிக்கு உணவு தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவருக்குத் தேவையான ஆலோசனைகளும் பராமரிப்பும் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூவருமே சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தப்பியோடிய மூன்றாவது சிறுவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறார் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
