உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச் செவ்வாய்க்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு பெண் குழந்தை பிறவியிலேயே உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பச்சிளம் குழந்தைகளும் அரசு மகளிர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, பிரசவம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏக்தாவுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை வேகமாகச் சரிந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனின்றி புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே ஒருமுறை கருச்சிதைவை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது தாயையே இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
