கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – தாரா தம்பதியின் 2 வயதுக் குழந்தை ராகுல், உணவின்றிப் பசியால் துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியால் ஏற்பட்ட ரத்தச்சோகையால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் வயிற்றில் உணவே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இத்தம்பதியினரின் அலட்சியப் போக்காலும், அதிகாரிகளின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி குழந்தைகளைப் பராமரிக்கத் தவறியதாலும் இந்த அவலம் நேர்ந்துள்ளது. இதையடுத்து, அத்தம்பதியின் எஞ்சிய ஐந்து குழந்தைகளையும் குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு அரசு காப்பகங்களில் சேர்த்துள்ளனர். பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
