உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி, குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். பலத்த மழையும் இருளும் சூழ்ந்திருந்த நிலையில், அவர் வழிமாறி ‘பாரி சௌக்’ பகுதியில் தவித்தபோது, அவ்வழியாக வந்த ஒரு காலியான ஸ்லீப்பர் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் வேறு பயணிகள் யாரும் இல்லாததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொடூரர்கள், தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் சுமார் 47 கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டியபடியே அந்தச் சிறுமியை ஈவுஇரக்கமின்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு அரங்கேறிய இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் அந்த மாணவியை காஷ்மீரி கேட் அருகே உள்ள ஒரு முக்கியப் போக்குவரத்து முனையத்தில் அனாதையாக இறக்கிவிட்டுத் தப்பியுள்ளனர். இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பேருந்தின் ஓட்டுநரான குல்தீப் மற்றும் நடத்துநரான சந்தீப் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
