ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சிறுமி மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகிய அந்த நபர், பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பயம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் பெற்றோரிடம் எதையும் தெரிவிக்காத சிறுமி, கடந்த ஆகஸ்ட் 1 அன்று வீட்டைவிட்டு வெளியேறிவிட்டு பின்னர் உடல்நலக்குறைவால் திரும்பியுள்ளார். கடுமையான வயிற்று வலியால் சோஹ்னா பகுதியில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு, கர்ப்பமாக இருந்து பிரசவ வலி ஏற்பட்டது குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனைத் தொடர்ந்து குருகிராம் சோஹ்னா மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி அளித்த புகாரின்பேரில், தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
