மகாராஷ்டிர மாநிலம் கோந்தியா ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற வசந்த் வர்மா என்ற பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலைதடுமாறினார். செகந்திராபாத் – ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிக்கொள்ளும் அபாயகரமான சூழல் ஏற்பட்டது.
அப்போது நடைமேடையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் தீபிகா பிசென், சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அவரைப் பிடித்து இழுத்துப் பாதுகாப்பாகக் காப்பாற்றினார். அவருடைய துரிதமான செயல்பாட்டாலும், மன உறுதியாலும் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
https://twitter.com/IndiaToday/status/2122975482031354192/video/1
நடைமேடை எண் 4-ல் நிகழ்ந்த இந்தத் திகிலூட்டும் மீட்புக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. உயிர்களைக் காக்கும் ‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் நாக்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், தீபிகா பிசென்னின் வீரதீரச் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
