டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில், 18 வயதான ஷப்னம் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட 29 வயதான சூரஜ் கடைக்குள் புகுந்து ஷப்னத்தைக் கொடூரமாகத் தாக்குவது பதிவாகியுள்ளது. வலியால் அலறித் துடித்த ஷப்னம் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, சூரஜ் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து உடை மாற்றும் அறைக்குள் தள்ளிச் செல்வது சிசிடிவியில் தெளிவாகத் தெரிகிறது.
உடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஷப்னத்தை, சூரஜ் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். நவம்பர் 14-ஆம் தேதி மாலை நடந்த இந்தச் சம்பவத்தில், இரவு 9 மணியளவில் கடையை மூடச் சென்ற ஊழியர்கள் உடை மாற்றும் அறைக்கு அருகே ரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், அங்கிருந்த ரத்தக்கறை படிந்த கத்தியையும் பறிமுதல் செய்தது.
கடையின் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பின் உதவியுடன் தப்பியோடிய சூரஜை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சூரஜும் ஷப்னமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மற்றும் காதல் விவகாரத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
