கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் தங்கள் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியைக் கவ்விப் பிடித்த சிறுத்தை ஒன்று, அதனைத் தூக்கிக்கொண்டு எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் புகுந்துள்ளது.
சிறுத்தையை நேருக்கு நேர் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்த நரசம்மா, சற்றும் தாமதிக்காமல் சுதாரித்துக்கொண்டு கணவருடன் வீட்டை விட்டு வெளியே ஓடினார். மேலும், மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டியதால், அந்தச் சிறுத்தை வீட்டிற்குள்ளேயே சிக்கிக்கொண்டது. வெளியேற வழியின்றித் தவித்த சிறுத்தை, படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டது.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் வனத்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பன்னர்கட்டா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு நிபுணரின் உதவியுடன், சுமார் ஆறு மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்திச் சிறுத்தை பாதுகாப்பாகக் கூண்டில் அடைக்கப்பட்டது. நரசம்மாவின் துரிதமான முடிவால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
