மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர பரௌதியா என்ற நபர் தனது குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்துவிட்டு, இரவு 8 மணியளவில் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரது நண்பர் ராமபகத் என்பவர், ராஜேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில், காட்டுப்பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு ஒன்றை ரசகுல்லா இனிப்பு என்று கூறி ராஜேந்திராவிடம் ராமபகத் கொடுத்துள்ளார்.
அதை உண்மையிலேயே ரசகுல்லா என்று நம்பி ராஜேந்திரா வாயில் போட்டுக் கடித்தவுடன், அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வாயில் பலத்த காயமடைந்த அவரைக் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்; இதையடுத்து ராமபகத்தைக் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
