மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் தனது இடது கையை இழந்துள்ளார். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி மாலை போரிவலியில் இருந்து விரார் நோக்கிச் சென்ற ரயிலில் அதிக கூட்டம் இருந்ததால், அந்தப் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது சக பயணி ஒருவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதைத் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ரயில் மீரா-பயந்தர் பகுதியில் உள்ள நைகான் ரயில் நிலையத்தை அடைந்தபோதும் இந்த வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. ஆத்திரமடைந்த அந்த நபர், இளம்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அவர் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இடைவெளியில் விழுந்தார். அவர் மீண்டும் நடைமேடைக்கு ஏற முயன்றபோது ரயில் புறப்பட்டதால், அவரது இடது கை சக்கரத்தில் சிக்கித் துண்டானது. தலையில் பலத்த காயமடைந்து தையல் போடப்பட்ட நிலையில், அவர் கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
https://twitter.com/nextminutenews7/status/2120807326877896924/video/1
இந்தச் சம்பவம் தொடர்பாக 53 வயதான ஜிதேந்திர ஹிர்முகே என்பவரை பயந்தர் ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய அந்த நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பெண்ணின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவித்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
