நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த 17 வயதான வில்லியம் என்ற சிறுவன், கூடுதல் பொருட்களை எடுத்து வரச் சென்றபோது மாயமானான். அவனைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள், நீச்சல் வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் செங்குத்தான மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகளில் 6 நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதலின் 6-வது நாளான நவம்பர் 12 அன்று காலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. காவல்துறை ஹெலிகாப்டர் குழுவினர், முகாம் இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மீன்பிடிப் பெட்டியைக் கண்டறிந்தனர். அதனை உற்று நோக்கியபோது, அருகிலுள்ள ஒரு ஓடையின் கரையில் வில்லியம் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
https://twitter.com/PeakHourImages/status/2120755352606318721/video/1
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு கண்விழித்த வில்லியம், மீட்புக் குழுவினரைப் பார்த்து தனது கட்டைவிரலை உயர்த்தி சைகை காட்டினான்; இதையடுத்து கயிறு மூலம் அவன் பத்திரமாக மீட்கப்பட்டான். 6 நாட்களாகக் காட்டில் தவித்தபோதும், உடலில் ஏற்பட்ட வெயில் காயங்கள் மற்றும் சிறிய சிராய்ப்புகளைத் தவிர அவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தான். மனம் தளராமல் தேடிய மீட்புக் குழுவினரின் முயற்சியாலும், 6 நாட்கள் நம்பிக்கையுடன் போராடிய சிறுவனின் மன உறுதியாலும் இந்த அற்புதம் சாத்தியமானது.
