தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்த 19 வயதுப் பெண் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூரு பகுதியைச் சேர்ந்த 15 வயதானமாணவர் சத்துப்பள்ளியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தசரா விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதே கிராமத்தில் கணவரைப் பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த அபர்ணா (20) என்ற பெண்ணுக்கும், 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி அபர்ணாவும் அந்தச் சிறுவனும் தனி அறையில் உல்லாசமாக இருந்ததை மாணவன் எதிர்பாராதவிதமாகப் பார்த்துக் கண்டித்துள்ளான். மேலும், இந்த விவகாரத்தை இருவரின் குடும்பத்தினரிடமும் சொல்லிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளான்.
தங்களது கள்ளத்தொடக்கம் ஊருக்குத் தெரிந்துவிடும் என்ற பயத்தில், மாணவனை கொல்ல இருவரும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மாணவனை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். குளிர்பானத்தைக் குடித்த சிறிது நேரத்தில் மாணவனுக்கு தொண்டை எரிச்சல், வாயில் கொப்புளங்கள் ஏற்பட்டது.
உடனே குடும்பத்தினரிடம் விபரத்தைக் கூறி அழுதுள்ள மாணவன் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நவம்பர் 8 அன்று பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கல்லூரு போலீசார், கொலைச் செயலில் ஈடுபட்ட அபர்ணாவைச் சத்துப்பள்ளி துணைச் சிறையிலும், உடந்தையாக இருந்த சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
