ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (70). கட்டிட மேஸ்திரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் மகன் கவின்குமார், சுகுமாரை பலமுறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சுகுமாரனை, கவின்குமார் மற்றும் அவரது நண்பரான வேப்பேரியைச் சேர்ந்த நித்திஷ் ஆகியோர் திடீரெனக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகுமாரனை அப்பகுதி மக்கள் மீட்டுப் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது கொலையாளி கவின்குமாரும் எந்தச் சந்தேகமும் வராத வகையில் உடன் சென்று நாடகமாடியுள்ளார்.
எனினும், பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரிலும் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையிலும் சுகுமாரனைக் கொலை செய்தது கவின்குமாரும் அவரது நண்பர்களும் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து நெமிலி போலீசார் கவின்குமார் மற்றும் நித்திஷ் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் இரு வாலிபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
