இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத் தெரியாமல் போய்விட்டதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு நடத்திய புதிய ஆய்வில் பதைபதைக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை முன்கூட்டியே கண்டறிவது குறித்து சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதன்படி, இந்தியாவில் தற்போது 8 கோடியே 98 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 43 சதவீதம் பேருக்கு, அதாவது தோராயமாக 3 கோடியே 86 லட்சம் பேருக்குத் தங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது பற்றியே தெரியவில்லை. இதனால் சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்க முடியாமல் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நீரிழிவு நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று 14 சதவீத மக்கள் தவறாக நம்புவதாகவும், 75 சதவீத பேர் ஏதேனும் அறிகுறிகள் வெளிப்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்று கருதுவதாகவும் ஆய்வு எச்சரிக்கிறது. ஆனால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் கூட நீரிழிவு நோய் தாக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
