பல லட்சம் மோசடியா?… இனிப்பு கடைகளில் QR கோடு மாற்றம்… நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்… கடைக்காரர்களுக்கு அதிர்ச்சி…!!

By Gayathri on கார்த்திகை 11, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நானக் ஸ்வீட்ஸ் மற்றும் காயத்ரி ஆஹார் ஸ்தல் ஆகிய இரண்டு கடைகளில் இருந்த அசல் கியூஆர் குறியீடுகளை மர்ம இளைஞர் ஒருவர் அகற்றியுள்ளார். பின்னர், அதற்குப் பதிலாகத் தனது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட போலியான கியூஆர் குறியீடுகளை ஒட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அறியாத வாடிக்கையாளர்கள், இனிப்புகளை வாங்கிய பிறகு அந்தக் குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பணம் கடை உரிமையாளர்களின் கணக்கிற்குச் செல்லாமல் மோசடி நபரின் கணக்கிற்குச் சென்றுள்ளது. இதனால் இரண்டு கடைகளுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பண்டிகைக் காலக் கூட்டத்தைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த நூதன மோசடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.