ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பிறந்த ‘பஞ்ச்’ என்ற ஜப்பானிய மக்காக் குட்டிக்குரங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாயால் கைவிடப்பட்டு, மற்ற குரங்குகளால் ஒதுக்கப்பட்ட போது சமூக ஊடகங்களில் உலகளவில் வைரலானது. ஆதரவற்ற நிலையில் தவித்த இந்தக் குட்டிக்கு, இச்சிகாவா நகர உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஆறுதலுக்காகவும் அதன் தசை வளர்ச்சிக்கும் ஒரு பெரிய ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பொம்மையை வழங்கினர். தனது தாயின் அரவணைப்பை அந்தப் பொம்மையில் தேடிய பஞ்ச், அதை எந்நேரமும் தன் கைகளிலேயே கட்டிப்பிடித்துக்கொண்டு சுற்றிய நெகிழ்ச்சியான காட்சிகள் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றன.
ஆரம்பக் காலங்களில் மற்ற பெரிய குரங்குகளின் கடுமையான படிநிலை ஒழுங்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களால் பஞ்ச் மிகவும் சிரமப்பட்டது. எனினும், காலப்போக்கில் அந்த உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் அன்பான கவனிப்பால், பஞ்ச் மெதுவாகத் தனது குழுவிலுள்ள பிற குரங்குகளுடன் பழகத் தொடங்கியது. தற்போது வளர்ந்து ஆரோக்கியமாக வாழும் பஞ்ச், பிற குரங்குகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றுடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டது.
இந்நிலையில், பஞ்ச்சின் தற்போதைய புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதில், அந்தப் பூங்காவில் புதிதாகப் பிறந்த ஒரு குட்டி குரங்கின் அருகே பஞ்ச் மிகவும் மென்மையாகவும் எச்சரிக்கையாகவும் அமர்ந்து, அதை ஒரு பாதுகாவலனைப் போலக் கண்விழித்துக் காத்து வருகிறது. தான் சிறுவயதில் அனுபவித்த அன்பின் ஏக்கத்தையும் வலியையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல், பிறந்து சில நாட்களேயான குட்டிக்கு அது காட்டும் பேரன்பு இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
