கொடுமை…. வெஜிடபிள் ரைஸில் மிதந்த கரப்பான் பூச்சி… “சாப்பிட்டா சாப்பிடு, இல்லனா போ”…. ஓசூர் ஹோட்டல் ஓனரின் திமிர் பேச்சு…!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

ஒசூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட வெஜிடபிள் ரைஸில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்குத் திரும்பி வரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரங்களில் பேருந்து நிலைய உணவகங்களை மட்டுமே பயணிகள் முழுமையாக நம்பியிருக்கும் நிலையில், இத்தகைய சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவது அவர்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி, “நாங்கள் பணம் கொடுத்துதானே சாப்பிடுகிறோம், இப்படி இருந்தால் எப்படி?” என்று நியாயமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்குச் சற்றும் குற்றவுணர்ச்சியின்றிப் பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர், “இருப்பது இதுதான்; சாப்பிட்டால் சாப்பிடுங்கள், இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள்” என்று அலட்சியமாகவும் திமிராகவும் பேசியுள்ளார். உரிமையாளரின் இந்த மனிதநேயமற்ற மற்றும் பொறுப்பற்ற பதில் அங்கிருந்த சக பயணிகளையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

   

மிதந்து வரும் வாடிக்கையாளர்கள் யாரும் நிலையாக வரமாட்டார்கள் என்ற தைரியத்தில், பேருந்து நிலைய உணவகங்களில் தரமற்ற உணவை வழங்குவது நீண்டகாலக் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. தற்போது ஒரு படி மேலே சென்று, உணவில் கரப்பான் பூச்சி கிடக்கும் அளவிற்குச் சுகாதாரக் சீர்கேடு அரங்கேறியுள்ளது. அண்மையில் மும்பையில் மசாலா தோசைக்குள் எலி இருந்தது போன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், உணவகங்களின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களின் உயிரோடு விளையாடும் நிலையை உருவாக்கியுள்ளது.

   

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு குறித்த கவலை மேலோங்கியுள்ளது. எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, ஒசூர் பேருந்து நிலையத்தில் இயங்கும் அனைத்து உணவகங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற முறையில் உணவைத் தயாரித்து, பயணிகளிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் உணவக உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.