மகாராஷ்டிரா மாநிலத்தில் பைக்கில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவைச் சரிசெய்ய முயன்ற வாலிபர் மீது பட்டாசுப் பொறி விழுந்து தீப்பற்றியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் கிழக்கு குதியில் உள்ள சாய்ராஜ் காலனி எப் கேபின் பகுதியில் வசித்து வரும் சச்சின் சிங் என்பவரது பைக் ஒன்றில் திடீரெனப் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிசெய்ய அவர் முயன்று கொண்டிருந்த போது, அருகில் யாரோ வெடித்த பட்டாசின் பொறி ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது ஆடைகளில் பட்டுள்ளது.
இதையடுத்து ஆடையில் பற்றிய தீ உடனடியாகப் பெட்ரோல் கசிவு மூலமாக அவரது உடல் முழுவதும் மளமளவெனப் பரவியுள்ளது. இதனால் வலியால் அலறியடித்த சச்சின் சிங் தீயில் கருகத் தொடங்கினார். உடனடியாக அங்கு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், போராடித் தீயை அணைத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இக்கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
