சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரான 19 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய தந்தை மற்றும் அவரது மூன்று மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய இருவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தனுஷ் (19) என்பவரின் அண்ணன் சிலம்பரசனை, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (என்கிற அப்புகுட்டி) குடிபோதையில் வழிமறித்துத் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தனுஷ் சம்பவ இடத்திற்குச் சென்று தட்டிக்கேட்டபோது, அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் தனுஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பலத்த காயமடைந்த தனுஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்த முறையற்ற தொடர்பு சார்ந்த விவகாரமே இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தனுஷ் தலையிட்டுத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் புகையத் தொடங்கியது. கடந்த தீபாவளி பண்டிகையின்போதும் சிலம்பரசனை அக்கும்பல் தாக்கிய நிலையில், மீண்டும் ஏற்பட்ட மோதலே இந்த படுகொலையில் முடிந்துள்ளது.
தலைமறைவாக இருந்த வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகரைச் சேர்ந்த பொய்யாது (58), அவரது மகன்கள் அப்புகுட்டி (29), சூர்யா (28) மற்றும் ரவி (26) ஆகிய நான்கு பேரையும் முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய இருவரையும் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
