திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி விடுமுறையைக் கழிக்க ஏரிக்குச் சென்ற அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த 4 மாணவிகளும், அவர்களைக் காப்பாற்ற முயன்ற விடுதிக் காப்பாளரும் நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் சாலை அருகே செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கிப் படித்து வந்த மாணவிகள், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்ல விரும்பியுள்ளனர். இதையயடுத்து, விடுதிக் காப்பாளரான தென்மொழி என்பவருடன் விஜயலட்சுமி, அல்லி, பூமிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகிய 4 மாணவிகளும் அங்குள்ள சமுத்திரம் ஏரிக்குச் சென்று குளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏரியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாணவிகள் ஒவ்வொருவராகத் தண்ணீரின் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கத் தொடங்கியுள்ளனர். இதைக் கண்டு பதறிய விடுதிக் காப்பாளர் தென்மொழி, மாணவிகளைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாகத் தண்ணீரில் குதித்துள்ளார். ஆனால், ஏரியின் ஆழம் மற்றும் சுழல் காரணமாக அவராலும் வெளியே வர முடியாமல் 5 பேரும் நீரிலேயே மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஏரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 5 உயிர்கள் பறிபோன இந்தத் துயரச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
