2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தீவிரமடைந்தன. இதில் அதிமுகவைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். இதில் 21 பேருக்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு வழங்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் போன்றோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனிடையே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு நிலுவையில் இருந்தது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எடுத்த முடிவுகள் சரியானவை என்றும், தகுதி நீக்க வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த 4 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தீவர விசாரணை நடத்தவுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வழக்கறிஞர் ஒருவரும் பங்கேற்கவுள்ளார். விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், வரும் நவம்பர் 17-ஆம் தேதி சபாநாயகர் தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரத்திற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், அவரது முடிவே இதில் இறுதியானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இத்தகைய விசாரணைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமையும் என்று கூறப்பட்டாலும், ஒருவேளை சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தால், இந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்க நேரிடும். மேலும், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் தற்போதைய பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், இந்த விசாரணை முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
