வங்கதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது காதலை நிராகரித்ததால், சக மாணவன் ஒருவன் அவரை கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் உலகளவில் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த 16 வயது பத்தாம் வகுப்பு மாணவி ஜாகியா சுல்தானா. இவரை அதே வகுப்பில் படிக்கும் அய்மான் என்ற மாணவன் காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளான். ஆனால், அந்த மாணவி அவரது காதல் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஏற்பட்ட ஆத்திரமும் பழிவாங்கும் எண்ணமும் கொண்ட அய்மான், மாணவி நடந்து சென்ற வழியில் கத்தியுடன் பின்தொடர்ந்து சென்று அவரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் பறிமுதல் செய்துள்ள வங்கதேசக் காவல்துறையினர், தப்பியோடிய மாணவன் அய்மானைப் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
