தமிழகத்தையே அதிர வைத்த ஒரே நாள் இரத்தம்…. தீபாவளி நாளில் அரங்கேறிய 11 படுகொலைகள்….. முதலமைச்சர் நாற்காலி என்ன சினிமா செட்டா?…. ‘ரீல்’ முதலமைச்சரை வெளுத்துவாங்கிய எடப்பாடி….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளதாகவும், ஒரே நாளில் 11 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளன்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருப்பதாக அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வருவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகத் தரைமட்டமாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரே ரவுடிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பு இல்லாத போது சாமானிய மக்களுக்கு எங்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

அரசியல் என்பது சினிமா செட் அல்ல என்றும், முதலமைச்சர் நாற்காலி என்பது பஞ்ச் டயலாக் பேசுவதற்கான மேடையல்ல என்றும் குறிப்பிட்ட அவர், தவெக அரசு இந்த உண்மையை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மேலும், பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாகத் தற்போதைய அரசாணையே கூறப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் போதுமானதல்ல என்றும், உடனடியாக 1 கோடி ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை அரங்கேற்றி தமிழகத்தை பதற வைத்துள்ள அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இந்த அரசைவலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.