கர்னூல் நகரில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்வாதி (30) என்ற திருமணமான பெண், மன உளைச்சல் மற்றும் விரக்தியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டாகத் தனது மூன்று வயது மகன் ஸ்ரீயானுடன் தனியாக வசித்து வந்த அவர், வெள்ளிக்கிழமை இரவு தனது தாயாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு, அன்றிரவு சுமார் 10 மணியளவில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தாயின் மரணத்தை அறியாத மூன்று வயது குழந்தை, இரவு முழுவதும் தாயின் உடலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து “அம்மா” என்று கூப்பிட்டும் அவர் எழுந்திராததால் விடிய விடிய அழுதுகொண்டே இருந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்புதான் ஸ்வாதியின் தாய் அவரது இளைய மகளின் வீட்டிற்குச் சென்றிருந்ததால், வீட்டில் தாயும் குழந்தையும் மட்டுமே இருந்துள்ளனர்.
மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்த சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது அழுது அழுது மயக்கமடைந்திருந்த குழந்தையை காவல்துறையினர் மெதுவாகத் தட்டி எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து கர்னூல் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
