நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, கல்விச் சார்ந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைக் கையில் எடுத்து வருகிறார். குறிப்பாக, 234 தொகுதிகளிலும் “காமராஜர் பயிலகம்” என்ற பெயரில் டியூஷன் சென்டர்களை தொடங்கி இயக்கி வருகிறார். மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். விஜய்யின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது நடிகர் தனுஷும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் பல்லவி மற்றும் மம்மூட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷிடம் தொகுப்பாளர், “234 தொகுதிகளிலும் இலவசமாக ஏசி டியூஷன் சென்டர் அமைக்கப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தனுஷ், தமிழ்நாடு முழுவதும் இலவச ஏசி டியூஷன் சென்டர்களை அமைக்கும் ஐடியா உள்ளது என்றும், ஆனால் அதை ஒரே அடியில் உடனடியாக செய்துவிட முடியாது என்றும் கூறினார்.
தனது முதல்கட்ட செயல்திட்டம் குறித்துப் பேசிய தனுஷ், இன்னும் 10 அல்லது 15 நாட்களில் சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் இலவச ஏசி டியூஷன் சென்டர்களை உறுதியாக தொடங்க உள்ளதாக அறிவித்தார். நடப்பு கல்விப் பருவத்திற்குள் மேலும் 10 இடங்களில் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய நவீன வசதிகளுடன் கூடிய டியூஷன் சென்டர்களைக் கொண்டுவருவதே தங்கள் முக்கிய விருப்பம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஏற்கனவே தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியது, மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது போன்ற நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், தற்போது மாணவர்கள் மற்றும் கல்வியை மையமாகக் கொண்டு அறிவித்துள்ள இந்தத் திட்டம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய்யை போலவே மாணவர்களைக் குறிவைத்து கல்வி சார்ந்த பணிகளில் இறங்குவதால், தனுஷும் விரைவில் விஜய் பாணியில் நேரடி அரசியலில் என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகிறாரோ என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
