அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா (23) என்பவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயர்கல்விக்காக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். அங்குப் படிப்போடு சேர்த்துப் பகுதிநேரப் பணியும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மாலை வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்ற அவர் அதன் பிறகு அறைக்குத் திரும்பவில்லை.
ஸ்ரீஜாவின் அலைபேசிக்குத் தொடர்பு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது செல்போன் சிக்னல் அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் பதிவாகியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். எனினும், மாணவி ஸ்ரீஜா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி படித்து வந்த மாணவி திடீரென மாயமான செய்தி அவரது குடும்பத்தினரைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
