மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார். சட்டமன்ற விதிகளின்படி, பெரும்பான்மையை நிரூபித்த ஒரு அரசு மீது அடுத்த ஆறு மாதங்களுக்கு எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. அந்த ஆறு மாத கால அவகாசம் வரும் நவம்பர் 13-ஆம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்களிலும் தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஆறு மாத கால அவகாசம் முடிகிறது என்பதால், நவம்பர் 13-க்குப் பிறகு விஜய் அரசை நிலைகுலைய வைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க ரகசிய வேலைகள் நடந்து வருவதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கசியும் தகவல்கள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நவம்பர் 13 நெருங்கி வருவதால் தவெக கூடாரத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு தனித் குழு களத்தில் இறங்கி, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தவெக நிர்வாகிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விஜய் அரசைக் கவிழ்க்கும் ஒரே நோக்கில், பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்த்துக்கொண்டு இந்த ரகசிய வியூகங்களை அமைத்து வருவதாகவும் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டத்தை முறியடிக்க தவெக தலைமை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காதவர்கள், பிற கட்சிகளிலிருந்து விலகி வந்தவர்கள் மற்றும் நிதி சார்ந்த அதிருப்தியில் இருப்பவர்கள் என மூன்று பிரிவுகளாக எம்.எல்.ஏ-க்களைப் பிரித்துத் தவெக தலைமை அவர்களைக் கண்காணித்து வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் தவெக மூத்த நிர்வாகிகள், எதிர்க்கட்சிகள் யாராவது பேரம் பேச முயன்றால் உடனடியாக கட்சித் தலைமைக்கோ அல்லது மாவட்டச் செயலாளர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். எந்தச் சூழலிலும் எதிர்க்கட்சிகளின் தூண்டிலில் விழுந்துவிடக் கூடாது என்பதில் தலைமை உறுதியாக உள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் மொத்த பலம் 234 ஆக உள்ள நிலையில், ஆட்சி நீடிக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக 109 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. விஜய் அரசைக் கவிழ்க்க வேண்டுமென்றால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி குறைந்தது 25 முதல் 30 எம்.எல்.ஏ-க்களை எதிர்க்கட்சிகள் இழுக்க வேண்டியிருக்கும் என்பதால் இது எளிய காரியமல்ல.
இருப்பினும் தவெக தரப்பு நம்பிக்கையுடன் களத்தைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. “திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் என்ன சதி செய்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் அரசை அசைக்க முடியாது” என்று அக்கட்சியினர் சவால் விடுக்கின்றனர். நவம்பர் 13-க்குப் பிறகு சட்டமன்றத்தில் எந்த நேரத்திலும் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கலாம் என்பதால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
