உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய உபி போலீஸ் கான்ஸ்டபிள் மீது பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி-யிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுனைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், கடந்த 2015-ஆம் ஆண்டு தான் பள்ளிப் படிப்பில் இருந்த போது மணீஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். திருமண ஆசை காட்டித் தன்னைப் படிப்பை நிறுத்த வைத்த மணீஷ், பல ஆண்டுகள் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், கர்ப்பமான நேரத்தில் பலமுறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை வேலை கிடைத்தவுடன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிவந்த மணீஷ், சீதாபூரில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்ததும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது ரூ.20 லட்சம் வரதட்சணை வாங்கிக் கொண்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்ய ஆயத்தமாகி வருவதாகவும், தட்டிக் கேட்டால் பொய் வழக்கில் சிக்குவிப்பதாக மிரட்டுவதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜாலவுன் காவல் துறைக்குக் கான்பூர் மண்டல ஏடிஜி உத்தரவிட்டுள்ளார்.
