மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபட்டின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சந்திரபூர் மாவட்டம் பத்திராவதி நகரின் நாகசேனை நகர் பகுதியில், 8 வயது சிறுவன் ஒருவன் தனது கோச்சிங் வகுப்பு முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சாலையைக் கடந்த சிறுவன் மீது, 17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த அதிவேக மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்து மோதியது. இந்த கோர மோதலில் சிறுவன் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
உடனே விபத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த மைனர் வாகன ஓட்டுநரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த பத்திராவதி காவல் துறையினர், காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாகச் சிறுவன் உயிர் தப்பியிருந்தாலும், வாகன ஓட்டிகளின் அதிவேகப் போக்கைக் கண்டித்து நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
