பள்ளி வகுப்பறையில் பாடப்புத்தகம் தவிர்த்த வேறொரு புத்தகத்தைப் படித்த காரணத்திற்காக, ஆசிரியர் அளித்த தொடர் மன உளைச்சலும் அவமானமும் மிங்மிங் என்ற 16 வயது மாணவியை மரணப் பாதைக்குத் தள்ளியுள்ளது. தவறைப் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று அந்தச் சிறுமி மன்றாடிக் கெஞ்சியபோதும், ஆசிரியர் அவளது தலையில் புத்தகத்தால் தாக்கியதுடன் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி கடுமையாக அவமதித்துள்ளார். அத்துடன் நில்லாமல், அவளைப் பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகத் தந்தையிடம் கூறி அச்சத்தை அதிகப்படுத்தியதால், பெரும் பயமும் அவமானமும் தாங்க இயலாத மாணவி, தன் குடியிருப்பு வளாகத்தின் 20-வது மாடியிலிருந்து குதித்து இன்னுயிரைத் துறந்துள்ளார்.
எப்போதும் துடிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பழகும் இயல்புடைய ஒரு மாணவி திடீரென விபரீத முடிவெடுத்ததன் பின்னணியில், ஆசிரியரின் வரம்புமீறிய தண்டனையும் அச்சுறுத்தலுமே முழு முதற்காரணம் என அவளது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவம் நிகழ்ந்த பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேரில் வராமல் தலைமறைவாக இருப்பதும், “இதை வகுப்புத் தோழர்களிடம் சொல்லாதீர்கள்” என்ற மாணவியின் இறுதிச் சொற்களும் அவள் அடைந்த தீவிர மன அழுத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தங்கள் மகளுக்கு நேர்ந்த அநீதியை வெளிக்கொண்டு வந்து உண்மையை நிலைநாட்ட, பெற்றோர் பள்ளியின் முன் நின்று நீதி கோரிப் போராடி வருகின்றனர்.
