பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள காய்கறிச் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் ஊறுகாய் ஜாடி ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அதைத் திறந்து பார்த்தபோது, ஊறுகாய்க்குள் செத்துக் கிடந்த பல்லி ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் முறையிட்டதுடன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார். உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் நிலவும் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
https://twitter.com/ndtv/status/2117850068204335459/video/1
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்ட கடையில் சோதனை மேற்கொண்டு ஊறுகாய் மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்துள்ளனர். சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் சுகாதாரத் தரத்தை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
