கிழக்கு டெல்லியில் உள்ள மயூரி விஹார் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், இன்று (நவ. 4) காலை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தனது இருக்கையிலிருந்து எழுந்து ஆசிரியரை நோக்கிச் சென்ற அந்த மாணவி, திடீரென நிலை தடுமாறி கீழே சரிந்தார். உடனடியாக அங்கு விரைந்த ஆசிரியர் மாணவியைத் தூக்க முயன்றதுடன், சக மாணவர்களும் பள்ளி நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவிக்க விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தச் சிறுமியை அருகில் உள்ள நிர்மாண் விஹாரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுமி திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
