திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்த மேல்மாநகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரனின் 10 வயது மகனான சந்தோஷ்குமார், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஜெகந்நாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தபோது திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பூந்தமல்லி அரசு மருத்துவமனைகளில் முதற்கட்ட சிகிச்சைகள் பெற்று வந்த சிறுவனுக்கு, பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை பேரூராட்சிப் பகுதியில் கொசு ஒழிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அதிகரித்து வரும் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் முகாமிட்டு தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் மருத்துவச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
