தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள இண்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சித்தன் – சின்னப்பாப்பா தம்பதியின் 19 வயது மகன் தேவராஜ், மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் ஊரில் தகராறு செய்து வந்துள்ளார். முன்னதாக அரிவாளுடன் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ரீல்ஸ் எடுத்த வழக்கில் சிறையிலிருந்த தேவராஜை, பெற்ற பாசத்தால் தாய் சின்னப்பாப்பாவும் அண்ணன் சித்துராஜும் சமீபத்தில்தான் ஜாமீனில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
கடந்த 29-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த தாய் சின்னப்பாப்பாவிடம் தேவராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த தேவராஜ், வீட்டில் இருந்த இரும்பு ராடால் தாயின் தலையில் பலமாகத் தாக்கியதில் சின்னப்பாப்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவு பூட்டப்பட்டிருந்ததால், கதவு துவாரத்தின் வழியாகப் பார்த்தபோது தேவராஜ் ரத்தக்கறை படிந்த இரும்பு ராடுடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதை மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
தகவலறிந்து வந்த இண்டூர் காவல்துறையினர் தேவராஜைக் கைது செய்து, சின்னப்பாப்பாவின் உடலை உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை கஞ்சா போதையில் நடந்ததாக செய்திகள் பரவிய நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் தன்னை யாரும் எதிர்த்துப் பேசக்கூடாது என்ற ஆத்திரத்திலேயே தாயைக் கொலை செய்ததாகக் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஜாமீனில் எடுத்து வந்த தாயையே மகன் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
